ஆயுர்வேதம்

முகவாத நோய்க்கு அருமருந்தான மாவிலங்கம்!

new svttv
Written by Shankar

இந்தியாவினைச் சார்ந்த இலையுதிர் மரம் மாவிலங்கமாகும். இது ஆற்றங்கரை ஓரங்களில் அதிகமாக காணப்படும். இந்த மரத்தின் இலைகள் மூன்று சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலையாகும். மாவிலங்கத்தின் இலைகளும், பட்டையும் மருத்துவ பயன் கொண்டவை.

கி.மு 8-ம் நூற்றாண்டிலேயே ஆயுர்வேத மருத்துவ குறிப்புகளில் மாவிலங்கத்தின் மருத்துவ பயன்பாடு பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. கி.பி 1100-ம் ஆண்டு முதல் சிறுநீரகக் கல் போக்க இந்திய மருத்துவத்தில் முக்கிய மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

இத்தாவரத்தில் சபோனின்கள், பிளேவனாய்டுகள், தாவரஸ்டீரால்கள் மற்றும் குளுக்கோசிலினேட்டுகள் காணப்படுகின்றன. இவற்றுள் வருனால், ரூட்டின், சிட்டோஸ்டிரால், பெட்டுலினிக் அமிலம், குளுக்கோகப்பாரின், கெடா பிசைன் போன்றவை காணப்படுகின்றன.

அலர்ஜிக்கு மருந்து

மாவிலங்கப் பட்டை ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலற்சி, மற்றும் தோல் வியாதிகளை குணப்படுத்தும். மேலும் காய்ச்சல் வயிற்று எரிச்சல், வாந்தி ஆகியவற்றினையும் போக்கும். மூட்டுக்களின் வீக்கம் மற்றும் புண் போக்க பசுமை இலைகள் உதவுகின்றன. கசக்கிய இலைகளை வினிகர் சேர்த்து பயன்படுத்துவர்.

முகவாதத்தை குணமாக்கும்

குளிர்காலத்தில் பனிக்காற்று தாக்குவதினால் ஏராளமானோர் முகவாத நோயினால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மாவிலங்கம் அருமருந்தாகும். மாவிலங்கு மரப்பட்டை, மூக்கிரட்டைப் பட்டை வேர், வெள்ளைச் சாரணை வேர் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து நன்கு இடித்து முதல் நாள் இரவில் 250 மில்லி தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதை கொதிக்க வைக்க வேண்டும். 50 மில்லி அளவு வரும் வரை கொதிக்க வைத்து இறக்கி, ஆற வைத்து வடிகட்ட வேண்டும். இதனுடன் 60மில்லி கிராம் ‘நண்டுகல் பஷ்பம்’ சேர்க்க வேண்டும்.

தினமும் பல் துலக்கியதும், இதை அருந்தி வர இரண்டு, மூன்று மாதங்களில் நிரந்தர குணம் ஏற்படும்.

சர்க்கரை நோயாளிகளை துன்புறுத்தும் பிரச்சினை ‘தோள்பட்டை உறைவு’. இந்த நோய்க்கான காரணம் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இந்தப் பிரச்சினையையும் மாவிலங்கம், மூக்கிரட்டை, வெள்ளைச் சாரணை வேர், நண்டுகல் பஷ்பம் மூலம் இரண்டு மாதங்களில் குணப்படுத்த முடியும்.

சிறுநீரக கற்களை வெளியேற்றும்

சிறுநீரகக் கற்களை நீக்க மேலை நாடுகளிலும், இந்தியாவிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. சிறுநீருடனேயே கல் வெளிவருவது போன்று உதவுகிறது. இன்றைய நவீன ஆய்வுகள் இதனை நிரூபித்துள்ளன. சிறுநீர்ப்பையில் வீக்கம், சிறுநீர்க்குழாய் அடைப்பு மற்றும் இனபெருக்க உறுப்புடனான சுரப்பியில் அதிக வளர்ச்சியினால் ஏற்படும் சிறுநீரக கோளாறுகளை குணப்படுத்துகிறது.

பாரம்பரியமாக கடந்த 3 ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்ட தாவர மருந்தின் அதே பயன்பாடு அதே நோய்களுக்கு ஏற்றது என்று நிறுவப்பட்டதற்கு சிறந்த எடுத்துக்காட்டு மாவிலங்கம்.

About the author

Shankar

Leave a Comment

Powered by themekiller.com anime4online.com animextoon.com