புராணம்

அர்த்தநாரீஸ்வரரின் திருவிளையாடல்

அர்த்தநாரீஸ்வர
Written by Svttv

உலகுக்கு உணர்த்த நினைக்கும் தத்துவங்களையும் வாழ்க்கை நெறிகளையும் தன்னுடைய விந்தையான திருவிளையாடல்கள் மூலம் வெளிப்படுத்துவதே இறைவனின் திருவருள். திருவிளையாட்டு பித்தர் எனும் பெயர் பெற்ற சிவபெருமானின் திருவிளையாடல்களை உணர, உணர நம்மை உயர்த்துபவை.எண்ணற்ற திருவிளையாடல்களை நிகழ்த்திய சிவபெருமான், உமையாளுக்கு இடபாகத்தை வழங்கி, ஆணும் பெண்ணும் இணைந்ததே உலக இயற்கை எனும் நியதியை உணர்த்திய இடம் திருவண்ணாமலை. இத்திருநாளில்தான் திருவண்ணாமலை மலை மீது மகா தீபம் எற்றப்படுகிறது.

உமையாளுக்கு தனது திருமேனியில் இடபாகம் வழங்கிய சுவையான அர்த்தநாரீஸ்வரரின் திருவிளையாடல்

சிவனை தவிர மற்றெல்லாம் சவமென கருதிய பிருங்கி மகரிஷி,தீவிர சிவனடியார். வேறு எந்த அவதாரங்களையும் வணங்க மறுத்த சிவ பித்தர். அதனால், உமையாளுக்கு மன வருத்தம். இறைவனின் துணையான தன்னையே வணங்க மறுக்கும் மகரிஷிக்கு பாடம் புகட்ட நினைத்தார். பிருங்கி மகரிஷி சிவனை வணங்க வரும் நேரம் பார்த்து, இறைவனின் கரத்தைப்பற்றி இடைவெளியில்லாமல் இணைந்து அமர்ந்து கொண்டார். அப்போது தன்னையும் சேர்த்துதானே வலம் வந்து வணங்க வேண்டும் என்பது அவரது நினைப்பு. ஆனாலும் விடுவரா சிவபித்தர். கண் இமைக்கும் நேரத்தில் வண்டு வடிவெடுத்தார். சிவனுக்கும், பார்வதியாருக்கும் இடையில் இருந்து சிறிய இடைவெளியில் நுழைந்து சிவனை மட்டுமே வலம் வந்து வணங்கினார் பிருங்கி.

கோபத்தால் அம்மையின் முகம் சிவந்தது. இறைவனின் திருவுடலில் இடபாகம் வேண்டும் என ஊடல் கொண்டார். கேதாரேஸ்வர விரதமிருந்தார். ஊடல் கண்டு உள்ளம் உருகிய சிவபெருமான், உமையாளுக்கு தனது இடபாகத்தை  வழங்கி, உமையொரு பாகனாக, அர்த்தநாரீஸ்வரராக எழுந்தருளி காட்சியளித்தார். ஈருடல் ஒருயிர் என்ற உன்னத நிலையில் சிவபெருமான் எழுந்தருளிய காட்சியை கண்டு அண்டசராசரமெல்லாம் கைதொழுதது. திருவண்ணாமலையில் நிகழ்ந்த இத்திருவிளையாடல் ஓவ்வொரு கார்த்திகை தீபத் திருநாளன்றும் நினைவுகூர்ந்து வழிபடப்படுகிறது.

மகா தீபம் ஏற்றப்படும் கார்த்திகை திருநாளன்று, அண்ணாமலையார் கோயிலில் தீப தரிசன மண்டபம் முன்பாக அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருள்வார். அதன்பிறகே மலை உச்சியில் மகா தீபம் எற்றப்படும். ஆனந்த தாண்டவத்தில் அர்த்தநாரீஸ்வரர் காட்சி தரும் சில நிமிடங்களுக்காக பக்தர்கள் வழியெல்லாம் நீர் கசிய கோயிலில் காத்திருக்கும் காட்சி காண கோடி கண்கள் வேண்டும். பவழக்குன்றின் மீது அர்த்தநாரீஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது.

சிவபெருமானின் கண்களை மூடியதால் ஏற்பட்ட பாவத்தை போக்கவே, அன்னை பார்வதிதேவி கடும் தவமிருந்து இறைவனின் திருமேனியில் இடபாகம் பெற்று இம்மண்ணில் வாழும் மனிதர்களில் ஆண், பெண் இருவரும் சமம் என்பதை உணர்த்துவதற்காக இறைவன் நடத்திய திருவிளையாடலின் தத்துவம்.

About the author

Svttv

Leave a Comment

Powered by themekiller.com anime4online.com animextoon.com